களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.
களப்பிரர்களின் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.
அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது[மேற்கோள் தேவை]. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.
களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளளப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். வேறு சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது[1].
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
accepted here