Rank

My Popularity (by popuri.us)

Vazhga Tamil

Thursday, April 22, 2010

யாருக்கிங்கே தெரிந்திடும்? / புரிந்திடும்?

அருவியின் சலசலப்பில்
குருவியின் கலகலப்பில்
மறந்திருந்தேன் என்னை நான்!
பிறந்திருந்தேன் புதிதாய் நான்!
கண்ணில் பெருகிய
கண்ணீர் துடைத்து
அண்ணாந்து பார்த்தேன்!
வானம் கூட - என்
மனம் போல் இருட்டியது
சில்லென்று குளிர் காற்றிடைச்
சிலிர்த்திட்டது என் மேனி! வானமோ
சோவென்று மழை கொண்டு
சோகமாய் அழுது விட
கோபமாய் இடியோ
சாபமிட்டுக் கொட்டித் தீர்த்தது!
என் மேனி எங்கும்
வானத்தின் அழுகை!
எனக்கும் வானத்துக்கும்
ஒரே எண்ணம்!
வானத்தைப் பார்த்து
மனதிடை தோன்றிய கேள்வியை
வினவிட்டேன் துணிந்து!
வானமே! உனக்கென்ன கவலை?

வானமோ குமுறிய அழுகையுடன்
சொன்னது பதிலொன்று!
எனக்குத் தான் யாரும் இல்லையே!
பகலவனும் இரவலனும்
எனக்கென்றே நினைத்திருந்தேன் – அவர்களோ
கணப்பொழுதில் சென்றனர்!
தனிமையால் வாடுகின்றேன்!
சோகமாய் அழுகின்றேன்
சோவென்று மழை கொண்டு - என்று
சொன்னதொரு பதிலொன்று!

ஒன்று மட்டும்
தோன்றியது என் நெஞ்சில்!
எல்லாம் கொண்ட இயற்கை கூட
இல்லாமை கண்டிங்கே வாடும் போது
இல்லை என்றே சொல்லும்
இந்த மனிதர் குலம்
மகிழ்வதெப்போ?

மழையுடன் என் கண்ணீரும்
எல்லாமே தண்ணீராய் - இதனிடை
என் அழுகையும்
வானின் அழுகையும்
யாருக்கிங்கே தெரிந்திடும்?
பாருக்கெங்கே புரிந்திடும்?

No comments:

Post a Comment

accepted here